பூசாணம் பிடித்த ரொட்டியின் ஓரங்களென

நைந்திருந்த கூடாரங்களில்
வனமற்றுப் போன
யானைகளின் வாலசைவைப் பார்த்தபடி
ஒட்டகங்கள் உட்கார்ந்திருந்தன
பாலைவனத்தின் எந்தத் தடயங்களுமற்று.
‘வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே வாருங்கள்’
என்ற எதிர் சுவற்றின் வாசகத்திற்கு மேல்
சைக்கிள் விடுகின்ற, பார் சாகஸப் பெண்கள்
கை உயர்த்திச் சிரித்தார்கள்.
மரணக் கிணறு தாண்டும் சாகஸக்காரன்
மதியச் சாப்பாட்டில் தொண்டையில் சிக்கிவிட்ட
மீன் முள்ளின் அவஸ்தையை
யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான்.
பின் பக்கமாக இலக்கமிருக்கத்
தலை திருப்பாமல் குறி பார்த்துச்
சுடுகின்ற துப்பாக்கி வீரனோ
தன் பூட்ஸின் லேஸ் கயிற்றினைச்
சரிவரப் பொருத்த
பலமுறை முயன்று கொண்டிருந்தான்.
தொடை கவ்வும் சிறு ஜிகினா உடை
பெண்ணொருத்தி விதூஷகனின்
மூக்கின் மேல் சிகப்பு வர்ணம் தீட்டுகின்றாள்.
சற்று விலகித் தெரிந்த அவளது உள்ளாடைப் பட்டியைச்
சரி செய்யும் அவனது பின்புறத்தை
சக விதூஷகனொருவன் கிரிக்கெட்
மட்டையால் தட்டுகின்றான்.
ஒருசக்கர சைக்கிள் விடும்
வெள்ளை நிறப் பொமரேனியன் நாய்க்குட்டிகளின்
புசுபுசு ரோமக்கற்றைகளைத்
தடவுகின்ற சிறுவனைப் போய்த்
தார்ப்பாய் மடிக்குமாறு
சிடுசிடுக்கிறார் மேற்பார்வையாளர்.
“சிங்கத்தின் வாயினுள் தலை விடுகின்ற
சாகசம் இப்பொழுது நடைபெறுவதில்லை”
என்று சொன்ன அவரது கண்ணசைவில்
கலைந்து கிடக்கின்ற
வளையங்களைச் சேகரித்து தன்
இடுப்பசைவில் சுழற்ற
உள்ளே விரைந்து ஓடுகின்றாள் சிறுமி ஒருத்தி.
‘நான்கு காட்சிகள் மட்டுமே’
என்கிற சாக்பீஸ் அறிவிப்பின் கீழ்
மிருகங்களின் சிறுநீர் வாடை நடுவே
மல்லிகை விற்றுக் கொண்டிருந்த பெண்ணிடம்
‘தீப்பெட்டி இருக்கா?’ என்று பகடி
செய்கின்ற விதூஷகனின் பீடியைப்
பிடுங்கிச் சிணுங்குகிறாள் அவள்.
அவரவர் பால்யத்தைக் குச்சி ஐசாக
ருசித்தபடி பெரிசுகளும்,
குடும்பத்திற்கான சிறு பசி தீர்க்கும்
வயர்க்கூடைகளுடன் அம்மாக்களும்,
வலைகளின் பாதுகாப்பற்று மேலே
நிகழ்த்தப்படும் விளையாட்டில்
வளைவு தேடும் விடலைக் கண்களும்,
பஃபூன்களுக்கான எதிர்பார்ப்புடன்
பஞ்சுமிட்டாய்களைச் சப்பிய ரோஸ் நிற வாயுடன்
சிறுவயதினரும் நுழைகிறார்கள்.
கணந்தோறும்
தொடங்குவதாகவும்,
நடந்து கொண்டிருப்பதாகவும்,
முடிந்து விடாததுமான
‘சர்க்கஸ்’ என்பது
கூடாரத்திற்குள் நடப்பதா என்ன?

Read Also  El viajero-1 (The traveler-1)/Soledades, Galerías/Spanish poem/Antonio Machado

* Click here to read Great Indian Circus Malayalam translation written by Dr. T. M. Raghuram